சித்தரத்தை – I Sitharathai – I

சித்தரத்தை – I
Sitharathai – I

Botanical Name : Alpinia Calcarata
English Name : Lesser Galangal
Tamil Name : சித்தரத்தை / Chitharathai , Sitharathai
Hindi Name : कुलंजन / Kulanjan
Malayalam Name : ചിറ്റരത്ത , കോലിഞ്ചി / Chittaratha, Kolinchi

மனிதரின் பல்வேறு வியாதிகளைப்போக்க, நல்ல மருந்தாகத் திகழ்கிறது, பொதுவாக, சிறந்த வலி நிவாரணியாக அறியப்படுகிறது, நாள்பட்ட இருமலுக்கு சிறந்த மருந்து, தொண்டைப்புண், இடுப்பு வலி, மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலிகள் மற்றும் அல்சர் எனும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மைமிக்கது. குழந்தைகளுக்கு ஏற்படும், மாந்தம், இளைப்பு மற்றும் சளித் தொல்லை களுக்கும் சித்தரத்தை, சிறந்த தீர்வாக அமையும். வாயு கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாச கோளாறுகளுக்கு இது நல்ல மருந்து.

நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும்.

‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்?’ என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. அந்த அளவுக்கு தொண்டையில் சேரும் கபத்தை வெளியேற்றும் சக்தி சித்தரத்தைக்கு இருக் கிறது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு வழங்கப்படும் பிரசவ லேகியத்தில் சித்தரத்தை சேர்க்கப்படு கிறது. சுவாச நோய்களுக்கான மருந்துகள், இருமல் மருந்துகள், வலி மற்றும் ஜீரண நோய்களுக்கான மருந்துகளில் சித்தரத்தை சேர்க்கப்படுகிறது.

இந்த தாவரம், இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது. இதன் கிழங்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். காய்ந்த பின்பு அடர்ந்த சிவப்பு நிறமாக மாறும். இது மருத்துவகுணம் நிறைந்தது. நறுமணம் கொண்டது. இது காரச் சுவை கொண்டது

சித்தரத்தை குறுஞ்செடிகளை எளிதில் வீடுகளில் தொட்டிகளிலேயே வளர்க்கலாம். இதன் பூக்கள் மிக அழகாக இருக்கும். செடியில் நறு மணம் வீசும். இதன் கிழங்குகளை சீவி, காய்கறிகளை கலந்து சூப்பாக தயார் செய்து பருகும் வழக்கம் கிழக்காசிய நாடுகளில் உள்ளது. சாலட்டாக தயார் செய்தும் சாப்பிடுகிறார்கள்.

சித்தரத்தை, சித்தரத்தை தூள், சித்தரத்தை கிழங்கு போன்றவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

அரத்தைகளின் பொதுகுணம் :

பாடல் :

தொண்டையிற்கட் டுங்கபத்தைத் தூரத் துரத்திவிடும்
பண்டைச் சீதத்தைப் பறக்கடிக்கும் – கெண்டை விழி
மின்னே ! கரப்பனைவே றாக்கும் பசிகொடுக்கும்
சொன்னோம் அரத்தைச சுகம் — அகத்தியர் குணவாகடம்

மார்பை யடர் பிணிசு வாசகா சம்மூலம்
சோபை தட்டச் சூர்வாத சோனித நோய் – தீபச்
சுரத்தை யடுபடர்பல் தூருறு கண் நேரின்
அறத்தை எடுத்துகள தாம் — தேரையர் குணவாகடம்

அரத்தையின் குணத்தைக் கேளீர் அக்கரஞ் சன்னிபோக்கும்
உரத்ததொரு இருமல் மாற்றும் ஓங்கிய உதிரம் போக்கும்
இறைத்திடுங் காச மெட்டும் மிஞ்சிய சாயமுந்தீரும்
சுரத்தையும் நீக்கு மென்று சொன்னது வேதநூலே — ஏடு

வாதபித்தம் கரப்பான் வாதஞ்சி ரோரோகம்
சேர்ந்தகப முத்தோ டஞ் சீதமொடு – நேர்ந்த சுரம்
மற்றரத்தைக் காட்டி வரும் இருமலுந்தீரும்
சிற்றரத்தை யின் மருந்தால் தேர் — தேரையர் குணவாகடம்

நெஞ்சுக் கோழை, ஈளை, இருமல், சீதளம்,கரப்பான், மார்பு நோய், மூலம், வீக்கம், தந்த நோய், தந்த மூலப் பிணி, வாத சோணிதம், தீச்சுரத்தால் பிறந்த கபம்,ஆகியவைகளை போக்கு.பசியைத் தரும்.

சித்தரத்தையின் மருத்துவ குணங்கள் : இது ஒரு வலி நிவாரணி, சளியைக் குணப்படுத்தும், இருமலைக் குணப்படுத்தும். மூட்டு வாத வீக்கம் குணப்படுத்தும். வயிற்றுப் புண் அல்சரைக் குணப்படுத்தும். தொண்டைப் புண்ணைக் குணப்படுத்தும்.

வாந்தி, பித்தம், கரப்பான், வாய், தலைநோய், கப தோட்டம், சீதளம், இருமல், சுரங்கள் தீரும்.

சிற்றரத்தை, திப்பிலி, தாளிச பத்திரி ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் சேகரித்து கொள்ள வேண்டும். அம்மியை சுத்தமாகக் கழுவி அதில் சேகரித்த பொருட்களுடன் சிறிது நீர் விட்டு நைய அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதை 100 மிலி நீரில் கரைத்து கொதிக்க விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த மருந்தை பலவித நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இந்த மருந்தை நோயின் தன்மை, நோயாளியின் வயதுகேற்ப தேன் கலந்து கொடுக்க மூக்கடைப்பு, மூச்சு திணறல், தலைவலி, சீதளம், தும்மல், வறட்டு இருமல், குத்திருமல், மார்பு நோய்கள் எல்லா வகையான காய்ச்சல், கபகட்டு, கோழை ஆகியவற்றை மிக துரிதமாகக் குணமாக்கும்.

Disclaimer: A compilation from various posts from Internet, Facebook, Whatsapp. Thanks for all those who contributed towards it. An interest to collect and bring to the notice of those interested is the idea of this post. I am not responsible for accuracy or inaccuracy of the information contained herein. None of the information contained herein is intended to offend anyone.

Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. It is always advised to consult a doctor or to do a patch test before using them to avoid allergic reactions.We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, tips from this site.